Friday, June 01, 2007

முதல் பயணம்!

என்னால் மறக்கமுடியாத என் முதல் பயணம் எனது ஏழு வயதில் அமைந்தது! அப்பொழுது நான் 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்களில் என் வகுப்புத் தோழர்கள் அவர்களின் வீட்டின் முன் ஏதாவது சாதனங்களை வைத்து விற்றுக் கொண்டிருப்பர். மிட்டாய், ப்ரைஸ் போர்ட் என்று விதவிதமாக.

எனக்கும் அதுபோன்று ஏதாவ்து விற்க வேண்டும் என்ற ஆவலில் சாதனங்கள் வாங்க வீட்டை விட்டு கிளம்பினேன் கையில் 10 ரூபாயுடன். எங்கள் வீட்டிலிருந்து சந்தை வெறும் 500 மீட்டர் தூரம் தான். சந்தைக்கு செல்வதற்காக கிளம்பிய நான் போகும் வழியில் ஒரு வீட்டில் வளர்ந்து தொங்கிய நெல்லிக்கனியை கண்ட ஆவலில் அதனைப் பறிக்க மரம் ஏறினேன்.

யாரும் பார்த்து விடக்கூடாது என்ற அவசரத்தில் அவசரம் அவசரமாக ஏறியதில் தடுக்கி கீழே விழுந்து உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள் ஆனது! வலி தாங்கமுடியவில்லை. வலி நெல்லியின் மீதான ஆசையையும் திருப்பி விட்டது. மட்டுமல்ல சந்தைக்கு செல்வதையும் தான்.

சந்தையில் சென்று ஏதாவது வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டில் என் காயத்தை அப்பா கண்டால் என்ன சொல்வது? உண்மையான காரணத்தை சொன்னால் தோலை உரித்து விடுவார்.

எனவே சாதனம் வாங்கும் எண்ணத்தை மாற்றி அப்படியே நடக்க தொடங்கினேன் எங்கே போவது என்ற சிந்தை இல்லாமலே. இவ்வாறு நடந்து கிட்டத்தட்ட அன்று சுமார் எட்டு கிலோ மீட்டருக்கும் மேல் சென்றிருப்பேன். நடந்து களைத்து ஒரு வீட்டு திண்ணையில் கிடந்து நன்றாக தூங்கி விட்டேன்.

மாலை வரை வீட்டிற்கு நான் செல்லாததை கண்டு என்னைத் தேடி வீட்டினர் அலைந்து திரிந்தனர். இரவு 8 மணி வேளையில் வீட்டிற்கு திரும்பிய எனக்கு, அன்று வீட்டில் கிடைத்த அடியையும் திட்டையும் இன்றுவரை மறக்கவே முடியாது.

முதல் படிக்கட்டு!

பயண அனுபவங்கள் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியான தித்திப்பான பல விஷயங்களை உள்ளடக்கியதாகும். நான் முதலில் என் அனுபங்களாக எழுதப்போவது என் பயண அனுபங்களைக் குறித்தாகும்.
தற்பொது தான் சொல்லிக்கொள்ளும் படியான ஓர் வேலையில் செட்டில் ஆகி உள்ளேன்! வேலை தேடி அலைந்த நாள் முதல் வலையுலகோடு நல்ல தொடர்பில் இருந்தாலும், வேலை கிடைத்த பின்னரே தமிழ் வலையுலகின் பக்கம் கவனம் வைக்க முடிந்தது.

அதிகமாக வேலைக்காக மட்டுமே வலையில் இருந்ததால் தமிழ் வலையுலகின் பக்கம் வரவே முடியாமல் போனது.

வேலைக்கு அமர்ந்த முதல் ஒருவருட காலம் வரைக்கும் அலுவலகத்தில் இணைய வசதி எனக்கு செய்துத் தரப்படாததால் பிரௌஸிங் செண்டர்களே என் அடைக்கலமாக இருந்தது.

தற்போது தான் அலுவலகத்தில் இணைய அனுமதி கிடைத்தது. இணையத்தில் தமிழை பார்த்த நாள் முதல் எனக்கும் தமிழில் ஏதாவது நெட்டில் எழுதி வரவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதுவும் தேன்கூடு, தமிழ்மணம் போன்ற தளங்களை பார்த்தபின் அந்த ஆவல் அதிகமாகவே இருந்தது.

நேற்று தான் முறையான அனுமதி எனக்கு கிடைத்தது. இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இத்தளம் வழியாக என் அனுபவங்களை இங்கு பங்கு வைக்க விழைவேன்.

என் முதல் பயண அனுபவத்தைக் குறித்து அடுத்த பதிவு.

முதல் பதிவு!

சோதனைக்காக!